தமிழ்நாடு ஊர்க்காவல் படை 1963ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது சென்னை பெருநகர காவல் ஊர்க்காவல் படையில்  1,792 ஆண்கள் மற்றும் 273 பெண்கள் என மொத்தம் 2,065 ஊர்க்காவல் படையினருடன் பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர், காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து, பகல் மற்றும் இரவு ரோந்து பணி, போக்குவரத்து சீர் செய்யும் பணி, முக்கிய திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், பேரிடர் உள்ளிட்ட அவசர காலத்தில் பணி, தேர்தல் பாதுகாப்பு பணி மற்றும் வெளி மாநிலங்களில் தேர்தல் பணி என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

     மேலும், காவல்துறைக்கு இணையாக, ஊர்க்காவல் படையினருக்கும் சிறந்த பணிக்காக குடியரசுத்தலைவர் பதக்கம், தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கி வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், ஊர்க்காவல் படையினரும், காவல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் கடந்த 29.02.2024 அன்று துவக்கி வைத்தார்.

     இதன் தொடர்ச்சியாக, ஊர்க்காவல் படையில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 363 ஆண்கள் மற்றும் 55 பெண்கள் என 418 ஊர்க்காவல் படையினருக்கு 25.09.2023 முதல் 21.11.2023 வரையிலான 45 நாட்கள் கவாத்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைப்பு பணி, முதலுதவி, தீயணைப்பு மற்றும் மீட்பு பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி நிறைவடைந்தது.

     சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள் இன்று (13.03.2024) மாலை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில், பயிற்சி முடித்த 418 ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அடிப்படை பயிற்சியில் சிறப்பாக விளங்கிய ஊர்க்காவல் படையினர் மற்றும் பயிற்சி அளித்த காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

     காவல் ஆணையாளர் அவர்கள், பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றவும், பேரிடர் மீட்பு உள்ளிட்ட அவசர காலங்களில் துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர்கள் திருமதி.A.கயல்விழி, இ.கா.ப., (தலைமையிடம்), திரு.G,தர்மராஜன், இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., (திருவல்லிக்கேணி, திரு.I.ஜெயகரன் (ஆயுதப்படை-1), திரு.S.அன்வர் பாஷா (ஆயுதப்படை-2), திரு.M.ராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகனப்பிரிவு), ஊர்க்காவல் படை உதவி ஜெனரல் தளவாய் (சென்னை) (Assistant Commandant General, Chennai) திரு.மஞ்சித் சிங் நாயர், ஊர்க்காவல் படை பகுதி தளபதிகள் (Area Commanders) திரு.விட்டோ பிளாக் (சென்னை/வடக்கு), திரு.சஞ்சய் பன்சாலி (சென்னை/கிழக்கு), திரு.சுகுமார் (சென்னை/மேற்கு), , காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.