சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், போக்குவரத்து விதிகளை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும் சாலை விபத்துக்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை போக்குவரத்து காவல் துறையினர் முயற்சித்து வருகின்றனர். இதன் விளைவாக கடந்த ஆண்டு 347 ஆக இருந்த உயிரிழப்புகள் இந்த ஆண்டு 330 ஆக குறைந்துள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், விஞ்ஞான முறையில் விபத்துக்கான காரணிகளை கண்டுப்பிடித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, IIT மெட்ராஸ் உடன் இணைந்து, ரூட் காஸ் அனாலிசிஸ் மேட்ரிக்ஸை (Root Cause Analysis Matrix) பயன்படுத்தி கள அதிகாரிகளின் புலனாய்வுத் திறன்களைக் கூர்மைப்படுத்துவதற்காக    3 நாட்கள் பயிற்சி வகுப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பை R.சுதாகர், .கா., கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து), அவர்கள் நேற்று (06.09.2023) தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளில் பணிபுரியும் 25 காவல் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தேர்தெடுத்து, அவர்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவதில் வாகனம், ஓட்டுநரின் பங்கு மற்றும் சாலையின் நிலை போன்ற விபத்துக் காட்சிகளின் விசாரணையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு பாடத்தின் உள்ளடக்கம் IIT மெட்ராஸின் சாலைப் பாதுகாப்பு சிறப்பு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டது.