“காவல் கரங்கள்” மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்; காவல் கரங்கள் மீட்பு பணிக்காக புததாக வழங்கப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று 9444717100 என்ற எண்ணில் (24 * 7) ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு “மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவை பணியாற்றி வருகின்றனர். உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. உணவு வழங்கி வரும் அமைப்புகள் மூலம்  உணவுகள் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள காப்பகங்களுக்கு வழங்கியும் வருகிறது.

காவல் கரங்கள் உதவி மையத்துடன்; 25 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், 150 தன்னார்வலர்கள், 55 மாநகராட்சி இல்லங்கள், 24 தனியார் இல்லங்கள், சமூக நலத்துறை, 108 ஆம்புலன்ஸ் ஆகியவை இணைந்து ஆதரவற்ற நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையுள்ள உதவிகள் செய்து வருகிறது.

காவல் கரங்கள் உதவி மையத்தில் நோய்வாய்பட்டும், உதவி தேடியும் ஆதரவற்ற நபர்களின் மீட்பு பணிக்காகவும், உணவுகளை சேகரிப்பதற்காகவும் 6 வாகனங்கள்  பயன்படுத்தப்படுகிறது.

நேற்று (20.08.2024) காவல் கரங்கள் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் காவல் கரங்களின் 3ஆம் ஆண்டுக்கான சேவை பற்றிய புத்தகம் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் வெளியீடு செய்யப்பட்டது.

மேலும் காவல் கரங்கள் மீட்பு பணிக்காக அதுல்யா அசிஸ்டிங் லிவிங் பிரைவெட் லிமிட்டெட் முனைவர் கார்த்திக் (MD), ஸ்ரீனிவாசன் CEO ஆகியோர்கள் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர். இ.கா.ப. கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் தன்னார்வலர்களுக்கு தேவையான மீட்பு உபகரணங்களையும் வழங்கினார். விழாவில் காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்), காவல் கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் காவல் உதவி ஆணையாளர் நவீன காவல் கட்டுப்பாட்டறை ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 7,133 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 4,965 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 1,104 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 793 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அரசு மருத்துவமனையில் 271 நபர்கள் உள்நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் உரிய உதவிகள் வழங்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள். காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் இதுவரை 1,93,700 உணவுகள் சேகரிக்கப்பட்டு, காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது. உரிமை கோரப்படாத 4,017 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது.