சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா. அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, மாதந்தோறும் சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு ஒவ்வொரு மாதமும்  நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுத்து ரூ.5,000/- பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                      திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா. அவர்கள் கடந்த பிப்ரவரி-2024 மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, திரு.R.பழனிசாமி,  காவல் உதவி ஆய்வாளர், R-7 கே.கே.நகர் காவல் நிலையம் என்பவரை இன்று (31.05.2024) நேரில் அழைத்து பிப்ரவரி மாத நட்சத்திர காவல் விருதுக்குரிய பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

  R-7 கே.கே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் R.பழனிசாமி இக்காவல் நிலையத்தின் நீதிமன்ற வழக்குகளை கண்காணித்து, நீதிமன்ற அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  R-7 கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவியை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அழகேசன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, அல்லிக்குளம் வளாகத்திலுள்ள மஹிளா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. உதவி ஆய்வாளர் திரு.பழனிசாமி, R-7 கே.கே.நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு உதவியாக சாட்சியங்களை ஆஜர்படுத்தி, இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், கடந்த 29.02.2024 அன்று கனம் மஹிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி அழகேசன் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.