சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக. சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஆயுதப்படை-1 வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், காவலர் நலன் சிற்றுண்டி விடுதி புதுப்பிக்கப்பட்டும். புதிதாக சாலை அமைக்கப்பட்டும். காவல்துறை வைப்பறை கட்டப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் இன்று (12.02.2024) நண்பகல், புதுப்பேட்டை, ஆயுதப்படை-1 வளாகத்தில் காவல்துறை தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான வைப்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைத்து, நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதியை திறந்து வைத்தார்.

புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தின் டிரைவர் சாலை வழியாக செல்லும் நுழைவு வாயில் சாலை, மிகவும் பழுதடைந்திருந்ததால், அங்குள்ள ஆயுதப்படை பணி நியமன அலுவலகம் செல்வதற்கும். காவலர் குடியிருப்புக்கு செல்வதற்கும் மிகவும் சிரமமாக இருந்தது. ஆகவே, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் 152 மீட்டர் தூரத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.

இதே போல, பழைய காவல் சிற்றுண்டி விடுதி சிறிய இடமாகவும், போதிய வசதியில்லாமலும் இருந்ததால், காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில். காவல் சிற்றுண்டி விடுதி மேற்படி இடத்தில் குளிரூட்டி வசதியுடன் புதிய மேஜை நாற்காளிகளுடன் ஒரே நேரத்தில் 48 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை பொருட்கள் வைப்பதற்காக ராஜரத்தினம் மைதானம் அருகிலுள்ள ஆயுதப்படை நிறும அலுவலகத்தின் மாடியில் புதிய வைப்பறை கட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு.கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.A.கயல்விழி, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள் திரு./.ஜெயகரன், (ஆயுதப்படை-1), திரு.M.ராதாகிருஷ்ணன் (மோட்டார் வாகனப்பிரிவு), திரு.S.அன்வர் பாஷா (ஆயுதப்படை-2), காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.