சென்னை பெருநகர காவல் துறை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் வன்முறைகளை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக AVAL (Avoid Violence through Awareness and Learning) திட்டத்தின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், சட்ட உரிமைகள், சமூகத்தில் பெண்களின் பங்கு, மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர்A. ராதிகா, இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில், சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வனிதா அகர்வால் அவர்களின் ஒத்துழைப்புடன், சென்னை பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் கடந்த 4.3.2025 முதல் 7.3.2025 வரை நான்கு நாட்கள் சிறப்பு தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 115க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, தன்னினைவுறுதி மற்றும் தற்காப்பு முறைகளை பயிற்றுநர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சி பெற்றனர். இதன்மூலம், அவர்கள் தங்கள் கல்லூரிகளில் மற்ற மாணவிகளுக்கு தற்காப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்:

  • சென்னை பல்கலைக்கழக பதிவாளர் திரு. ஏழுமலை
  • சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் முனைவர் S. ஆம்ஸ்ட்ராங்
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் முனைவர் G. வனிதா
  • விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் V. ராஜலட்சுமி
  • சைபர் கிரைம் உதவி ஆணையாளர் K.V. காவியா

இந்த நிகழ்வில், பெண்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும், பொதுவெளியில் பாலியல் தொந்தரவுகளை சமாளிக்க தேவையான பாதுகாப்பு நடைமுறைகள், காவல் உதவி செயலியின் பயன்பாடு, மற்றும் அவசரத்திலே தொடர்பு கொள்ளவேண்டிய காவல் உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 115க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.