சென்னை பெருநகர காவல் துறையின் 109வது ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் IPS, பொறுப்பேற்றார்.சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இன்று பதவி ஏற்கிறார்.இதனால் சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் டிஜிபியாக இருந்த சந்தீப் ரத்தோர், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமனம் செய்து தமிழக உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா வியாழக்கிழமை (ஜூன் 29) உத்தரவிட்டார்.

தில்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர், கடந்த 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய சந்தீப் ராய் ரத்தோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை காவல்துறையின் போக்குவரத்து துணை ஆணையர், இணை ஆணையர், தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஐஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து ஆவடி மாநகர காவல்துறைமுதல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமிக்கு அண்மையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், இப்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமும், பழமையும் மிக்க சென்னை பெருநகர காவல் துறையின் 109-வது ஆணையராக பொறுப்பேற்றார்.