மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் இ.கா.ப. அவர்கள் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநகரம், மதுரை மாவட்டம், மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல முக்கியமான தலைப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக,

  • குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போக்சோ) தொடர்பான வழக்குகளை எவ்வாறு சிறப்பாக கையாளுவது
  • பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கும் நடவடிக்கைகள்
  • இணையதள (சைபர்) குற்றங்களை தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள்
  • போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வழிகள்
  • பொதுமக்கள் மற்றும் காவல்துறை உறவு மேலும் மேம்பட என்ன செய்யலாம்
  • காவல்துறையினரின் மன அழுத்தம் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
  • சட்டம் & ஒழுங்கு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது

ஆகிய விடயங்கள் பற்றிய ஆலோசனைகள் ஆழமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர், தென் மண்டல காவல் துறை தலைவர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் பல்வேறு காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், மதுரை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி, குற்றங்களை தடுக்கும் பணியில் முக்கிய சேவைகளை வழங்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் இ.கா.ப. அவர்கள் நேரில் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்த கூட்டத்தின் மூலம், சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்வதற்கான முக்கிய வழிமுறைகள் வகுக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.