மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24.05.2025 அன்று, மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில், தீவிபத்துகளை கையாளுதல் மற்றும் அவசரநிலைச் சந்தர்ப்பங்களில் முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின், IPS., அவர்கள் தலைமையில் துவக்கி வைத்து, இவ்வகையான அவசரநிலைகளை எளிதாக கையாளும் வகையில் காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில், மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர் டாக்டர். தமிழ்செல்வன் ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியின் போது, தீவிபத்துகளில் தீயின் தன்மையைப் பொருத்து பயன்படவேண்டிய தீயணைப்பான்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தீவிபத்துக்குள்ளானவர்களை மீட்கும் நடைமுறைகள், சாலை விபத்துகள் மற்றும் உடல்நலக்குறைவினால் ஏற்பட்ட அவசரநிலைகளில் அளிக்க வேண்டிய முதலுதவிகள் போன்றவை விரிவாக கூறப்பட்டன.


இந்த பயிற்சியில் மயிலாடுதுறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சீர்காழி உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் பணியாற்றும் 08 காவல் ஆய்வாளர்கள், 21 உதவி ஆய்வாளர்கள், 117 காவலர்கள் மற்றும் 74 ஊர்காவல்படையினர் பயிற்சியில் பங்கேற்றனர்.
இத்தகைய பயிற்சி முகாம்கள், சமீபத்தில் மாவட்டத்தில் நிகழ்ந்த பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சிகள் போன்ற தீவிர சம்பவங்களை எதிர்கொள்ள காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டவை. மேற்படி சம்பவங்களில் தற்கொலைக்கு முயன்ற நபர்களுக்கு எதிராக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி முகாம், மாவட்ட காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், அவசரநிலைகளைக் கையாள்வதில் புதிய திறன்களை வழங்கியதாக அமைந்தது.