பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் (ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை) சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு, சாலைகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இன்று (24.01.2025), மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., ஆகியோரின் தலைமையில் காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். பேரணி நான்கு ரோடு, துறைமங்கலம் வழியாக செல்லப்பட்டு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன், மற்றும் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.

என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக,
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை…