கண்டாச்சிபுரம் தாலுகா, ஒடுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் அவர்களின் மனைவி ஷாலினி, நேற்று மரக்காணத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பும்போது பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேல்வாளை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, தனது கைப்பையில் இருந்த 5 சவரன் தங்க நகை காணாமல் போய்விட்டதாக இன்று காவல்துறையில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.காத்தமுத்து தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. பேருந்தில் மற்றும் அந்த பகுதி சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்ததில், இந்த திருட்டில் இரு பெண்கள் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தெய்வமங்கலம் கணேஷ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவிகள் காவியா (30) மற்றும் பல்லவி (32) என்பதூடு இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.