விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS., நேரில் பாராட்டு தெரிவித்தார் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

ஆட்டோ திருட்டு – விரைவாக கைது

மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட ஆட்டோவை ஒரு மணி நேரத்திற்குள் மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுமாறன், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமதாஸ், விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் தலைமை காவலர் கலையரசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

அனுமதியின்றி மணல், கிராவல் கடத்தல் – காவல்துறையின் கடுமையான நடவடிக்கை

  • வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த மூன்று எதிரிகள், இரண்டு லாரி மற்றும் ஒரு ஜேசிபி ஆகியவற்றை கைப்பற்றிய உதவி ஆய்வாளர் முரளி, முதல் நிலை காவலர்கள் மணிகண்டன், திருமூர்த்தி, பாஸ்கர் ஆகியோரை பாராட்டினார்.
  • கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியபாபுசமுத்திரம் பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை கைப்பற்றிய வளவனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கௌதமன், சிறப்பு உதவி ஆய்வாளர் தேவநாதன், தலைமை காவலர் ராஜா, பிரதீப் குமார் மற்றும் முதல் நிலை காவலர் தீனதயாளன் ஆகியோரின் நடவடிக்கை பாராட்டப்பட்டது.

தங்க நகை திருட்டு – 10 மணி நேரத்தில் இருவரும் கைது

கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் கைப்பையில் இருந்த 5 சவரன் தங்க நகையை திருடிய இருவரை 10 மணி நேரத்திற்குள் கைது செய்து நகையை மீட்டெடுத்த உதவி ஆய்வாளர் காத்தமுத்து, முதல் நிலை காவலர் ராஜா, Data Entry உதவியாளர் வினோத் ஆகியோரின் செயல்திறமைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் அவர்கள் கலந்து கொண்டு அதிகாரிகளை உற்சாகப்படுத்தினார்.