திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் (54), த.பெ. ஜெயரமான், காந்தி நகர், மணப்பாறை என்பவர், 06.02.2025 காலை 10.20 மணியளவில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்ததாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி, 06.02.2025 இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்து மூல புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்:
- வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்)
- மாராச்சி (பள்ளி தலைவர்)
- சுதா (பள்ளி தாளாளர்)
- செழியன் (துணை தாளாளர்)
- ஜெயலட்சுமி (பள்ளியின் முதல்வர்)
வழக்கு தொடர்பாக அனைத்து ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதலாவது எதிரி வசந்தகுமார், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
துரித விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
🔹 திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
🔹 வழக்கில் உள்ள அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, துரித புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔹 மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
🔹 இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.