திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய பாதுகாப்புத் துறை பணியாளர் கண்ணையன் (59) தனது வீட்டின் உள் அலங்காரப் பணிக்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தரம் சர்மா (31) தலைமையில் பீகாரைச் சேர்ந்த சிண்டு (28), சச்சின் குமார் (26) ஆகியோரைக் கூட்டி அமைத்திருந்தார்.

2023 செப்டம்பர் 21 அன்று சம்பளப் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சிண்டு மற்றும் சச்சின், தரம் சர்மாவை சுத்தியலால் தாக்கினர். பின்னர், கண்ணையனின் இருசக்கர வாகனத்தை திருடி தப்பினர். கண்ணையன் தரம் சர்மாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோதும், அவர் செப்டம்பர் 23 அன்று உயிரிழந்தார்.

இதையடுத்து, துறையூர் காவல் நிலையத்தில் 302 IPC படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, பீகார் மற்றும் ஹரியானாவில் தேடுதல் நடத்தப்பட்டது.

முடிவாக, 22 மார்ச் 2025 அன்று ஹரியானாவில் ஒளிந்திருந்த சச்சின் குமார் (A2) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முக்கிய குற்றவாளி சிண்டு (A1) இன்னும் தேடப்பட்டு வருகிறார்.