2022 ம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட கீழவெள்ளூர் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் கு.எண் 155/22 சட்டப்பிரிவு 302, 201 இ.த.ச-வின் படி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகும் இறந்தவரையும், குற்றவாளிகளையும் இரண்டு ஆண்டுகளாக அடையாளம் காணமுடியாமல் இருந்தது. இந்த வழக்கில் இறந்தவரை அடையாளம் காண 2024 மே மாதத்தில் பிரத்யேகமாக, தற்போதைய காவல் ஆய்வாளர் க. சிவக்குமார், சார்பு ஆய்வாளர் ஆர். ஜெயக்கண்ணன், தலைமைக் காவலர் 2361 ஜி.கண்ணன், முதல்நிலைக் காவலர் 1123 வி. அருண்சோழன் மற்றும் முதல் நிலைக் காவலர் 1792 ஜி. கார்த்திக் ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
சிறப்பு தனிப்படை புதிய கோணத்தில் விசாரணை மேற்கொண்டது. மேலும், குற்றம் நடந்த இடத்தில் சேவல் சண்டைகள் நடைபெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சேவல்சண்டை விடுவோர்களின் பட்டியல் பெறப்பட்டு, சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த அனீஸ் ரஹ்மான் (42) என்ற நபரின் இணையவழி பணப்பரிவர்த்தனை வரலாற்றை பரிசோதித்ததில், குற்றம் நடந்த பகுதியின் அருகில் சில பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நடவடிக்கைகளை விரிவாகவும் உன்னிப்பாகவும் ஆராய்ந்ததில், சிறைக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கம்பம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி (45), த/பெ ஷாகுல் ஹமீது என்பவரைக் கொலை செய்தது உறுதியானது. இறந்தவரின் அடையாளம் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு, கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அண்ணாமலை (45), த/பெ அம்மாவாசை என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த சவாலான வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்த திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் க. சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரை காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.