திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 22.04.2025 அன்று மாலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் மாலை 6.20 மணியளவில் அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் போலீசாரை கண்டதும் மூன்று நபர்கள் தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ரெங்கா சுரேந்திரன் (33 வயது), தந்தை பெயர் ஜெகநாதன், தீரன் நகர், திருச்சி; ராமர் @ ராகேஷ் (31 வயது), தந்தை பெயர் செல்வம், சண்முக நகர், உய்யகொண்டன்மலை, திருச்சி; ஸ்ரீ ஹரிஷ்குமார் (30 வயது), தந்தை பெயர் வீரராஜ், 3வது குறுக்கு, தில்லை நகர், திருச்சி என அடையாளம் காணப்பட்டனர்.
விசாரணையின் போது அவர்கள் பதில்களில் முரண்கள் காணப்பட்டதால், போலீசார் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடமிருந்து மெத்தகுலோன், MDMA போதை மாத்திரைகள், செறிவூட்டப்பட்ட கஞ்சா, எடை கணிப்பதற்கான இயந்திரம், இரண்டு ஐபோன்கள் மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் ரூ.2,00,000 மதிப்புடையவை என மதிப்பீடு செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் NDPS Act பிரிவுகள் 8(c), 20(b)(ii)(A), 22(b), 22(c), 23(b), 27(a) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இதேபோன்று அரசு தடைசெய்த போதைப்பொருட்கள், கள்ளச்சாராயம், போலி மதுபானம் மற்றும் பிற மதிமயக்கும் பதார்த்தங்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தகவல் தெரிந்தால், பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாட்ஸ்அப் எண் 8939146100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0431-2333621 ஆகியவற்றை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.