காவல் பணி என்பது சிக்கலான சவால் நிறைந்த பணி என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனால் தற்போது உள்ள நிலை அதைவிட மோசமாக உள்ளது காரணம் வாய்மொழி உத்தரவாக வந்திருக்கும் ஒரு செய்திதான் காவலர்கள் புலம்பலுக்கு காரணம்!
மேலும் என்ன என்பதை அறிந்துகொள்ள களத்தில் இறங்கினோம்….
அதில் கிடைத்த தகவல்கள் நம்மை சிரிப்பதா!
அழுவதா!
என்று ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
வாருங்கள் விவரமாக பார்க்கலாம்!
தற்போது மட்டுமல்ல எப்பொழுதுமே எந்தத் துறையிலும் ஆங்காங்கே ஒரு சில தவறுகள் நடப்பது இயல்புதான்,ஆனால் எப்பொழுதுமே பலிகடா ஆக்கப்படுவது காவலர்களும் காவல்துறையும் மட்டும்தான்.
தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் காவலர்கள் 24 மணி நேரமும் பணிச்சுமையுடன் ஓய்வில்லாமல், விடுமுறை இல்லாமல் வேலை செய்கிற காரணத்தினால் பணிச்சுமையாலும், மன அழுத்தத்தினாலும், நெருக்கடியாக இருக்கிற நிலையில் காவல்துறையில் பல்வேறு நிலையிலுள்ள காவலர்கள் முதல் காவல் அதிகாரிகள் உட்பட தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு நிறைய தற்கொலைகளும் நடந்து வருவது எதார்த்தமான கசப்பான உண்மை!
ஆனால் அவ்வளவு பணிச்சுமையிலும் பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மேலும் கூடுதலாக சில பணிகள் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த பணிகள் என்னவென்றால் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளாக மூத்த குடிமக்களுக்கு உதவுவது,ரேஷன் கார்டு வாங்கித் தருவது , வாரிசு சான்று கொரோனா நிவாரண உதவிகள் வாங்க உதவுவது, சிறுவர்களை பள்ளியில் சேர்ப்பது, புத்தகங்கள் வாங்கி தருவது ,படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்குவது,நல்வழி காட்டுவது அடுத்துவிதவைப் பெண்களுக்கு உதவுவது ,பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு அளிப்பது ,
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது, இது போல சமூக பணி செய்ய வேண்டுமென்று வாய்மொழி உத்தரவாக வந்துள்ளது!
ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ள காவலர்கள் புதிதாக செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிற பணிகள் அனைத்தும் செய்வதற்கு தனித்தனியாக துறைகள் உள்ளது. அவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது. அதைவிடுத்து அத்தனை துறைகளும் செய்கின்ற பணிகளை காவல்துறை காவலர்களை வைத்து ஆல் இன் ஆல் செய்ய வேண்டும் என்பது மேலும் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையே இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம், குழப்பம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை! இதுபோன்ற உத்தரவு முதலில் நடைமுறைக்கு ஏற்றதா? என்பதை ஆராய்ந்து இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.இது போன்ற வேலைகளை செய்து தர ஒவ்வொரு திங்கட்கிழமையன்று மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.
இது போன்ற வேலைகள் செய்வதற்கு தான் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா !
பல்வேறு துறைகளில் செய்ய வேண்டிய வேலையை காவலர் கள் செய்வதற்கு அவர்களுக்கு துறை ரீதியான அனுபவ அறிவு அவர்களுக்கு இருக்க வேண்டும், என்பதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும், இணக்கமான சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . எனவே இதுபோன்ற நடைமுறைக்கு ஒத்து வராத வேலைகளை செய்ய வைப்பது மேலும் குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும் அதோடு காவலர்கள் அதிகாரிகள் இடையேயும் பிரச்சினைக்கு வழி வகுக்கும். இதெல்லாம் பார்க்கும் போது காவல் துறையினர் ரொம்ப நல்லவன்னு பேரெடுக்க இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்…னு அவ்வளவு வேலையையும் காவலர்கள் மேல் சுமத்தக்கூடாது என்பதே காவலர்களின் வேண்டுகோள்!