போதைப் பொருட்களுக்கு எதிராக (Drive Against Drugs) விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறந்த விழிப்புணர்வு ஆவண குறும்படம் (Documentary Films) போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த 4 குறும்படங்களின் இயக்குநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கான காமிக்தொடர் வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் காவல் குழுவினர் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஈடுபாட்டை உறுதி செய்யும் நோக்கத்தில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக “Drive Against Drugs” என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு மற்றும் போதை தடுப்பு குறித்து ஆவண குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்த 30.12.2022 அன்று அறிவிக்கப்பட்டு, திரைப்பட இயக்குநர் விக்னேஷ்சிவன் தலைமையிலான குழுவினருடன் ஆவணகுறும்படம் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆர்வமாக 300 நபர்கள் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை தயார் செய்து இணையதளம் மூலம் அனுப்பி வைத்தனர்.
திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தலைமையிலான குழுவினர் மேற்படி 300 குறும்படங்களை பார்வையிட்டு, சிறந்த 10 ஆவண குறும்படங்களை தேர்வு செய்தனர். பின்னர் இக்குழுவினர் மீண்டும் முழுமையாக ஆய்வு செய்தும், கலந்தாலோசித்தும், இதில் முதல் 3 இடங்களுக்கு 4 ஆவண குறும்படங்களை தேர்வு செய்தனர்.
இன்று (25.03.2023) காலை, இராயப்பேட்டை, சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு குறும்பட போட்டியின் பரிசளிப்பு விழாவில், மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் “Drive Against Drugs‘‘ குறும்படம் போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில் பிரகதீஷ் என்பவர் இயக்கியஎலவு என்ற ஆவண குறும்படம் முதல் பரிசும், ஹேமந்த் என்பவர் இயக்கிய அன்பின்போதை என்ற ஆவண குறும்படம் 2ம் பரிசும், கிராஷங் பாலநாராயணன் என்பவர் இயக்கியஅன்பு என்ற ஆவண குறும்படம் மற்றும் மனோஜ் கண்ணன் என்பவர் இயக்கியபோலீஸ் என்ற ஆவண குறும்படம் இணைந்து 3ம் பரிசும் பெற்றது.
மேற்படி தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவண குறும்படங்கள், சென்னை பெருநகர காவல் துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்தின் குறும்படமாக அனைத்து பொது இடங்களிலும், திரையங்கிலும் திரையிடப்படும். இந்த முயற்சி திறமையை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல், படைப்பாற்றல் மூலம் போதைபொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை தீவிரமாக ஈடுபடுத்தவும் வழிவகுக்கிறது.
இதனை தொடர்ந்து, “Learn With Comics எனும் அரசுசாரா அமைப்பு மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து தயாரித்த காமிக்தொடர் வெளியிடப்பட்டது. இந்த காமிக் தொடரானது, நிஜ வழக்குகளை அடிப்படையாக கொண்டு 2 கதைகளாக உருவாக்கப்பட்டது. நிஜ வழக்குகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வண்ண மயமான, சுவராஸ்யமான கதைகள் மூலம் போதைக்கு எதிரான கருத்துக்கள் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்தோடு அமையப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் T.S.அன்பு, இ.கா.ப., (வடக்கு), இணை ஆணையாளர்கள் R.V.ரம்யாபாரதி, இ.கா.ப, (வடக்கு மண்டலம், திஷா மிட்டல், இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், காமிக் தொடர்கள் தயாரித்து கொடுத்த அபிஷேக், வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி, இ.கா.ப., துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Jpr,Chennai.