போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 150 பேர் கையெழுத்திட்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் இன்று உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடமும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, மாராத்தான் போட்டி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். வியாபார ரீதியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டம் அல்லாமலேயே ஒரு வருடம் ஜாமீன் வழங்காமல் சிறையிலடைக்க சட்டத்தில் வழிவகை உண்டு. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக 66 வழக்குகள் பதிவு செய்து 123 எதிரிகள் கைது செய்யப்பட்டு சுமார் 142 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் செல் போன் 83000 14567 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், கோடிலிங்கம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.