பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் மனுவிசாரணை கண்காணிப்பு மையம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அறையை 20.07.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த கணினி மென்பொருளின் பயன்களாவன.

✓ இந்த கணினி மென்பொருள் மூலம் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மனுக்கொடுக்க வரும் மனுதார்களின் முகவரிகள் அடங்கிய முழுத் தகவல்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்களால் (Receptionist) இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும்.

✓ மனுதார்களை காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் (Receptionist) எவ்வாறு வரவேற்றார்கள் என்பதையும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டார்களா? என்ற விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

✓மனுதாரர்கள் எவ்வித பிரச்சனை சம்மந்தமாக புகார் செய்துள்ளார்கள் மற்றும் அவர்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டதா? என்ற விவரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மேற்பார்வையிடப்படும்.

✓ மேலும் காவல் நிலையங்களில் பணிபுரியும் நிலைய வரவேற்பாளர்கள் (Receptionist) ஒவ்வொருவரும் மனுதாரர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை மனுவிசாரணை கண்காணிப்பு மையத்தின் மூலம் ஒவ்வொரு புகார் மனுதாரர்களிடமும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்துக்கள் (Feedback) தெரிந்துகொள்ளப்படும்.

✓ மனுதாரர்கள் கொடுத்த புகாருக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளதா, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.

✓மனுதாரர்கள் ஒவ்வொருவரும் காவல் நிலையத்திற்கு எத்தனை முறைகள் வந்துள்ளனர் என்ற தகவல் இந்த மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு அந்த தகவல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்படும்.

✓இந்த மென்பொருள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு எத்தனை மனுதாரர்கள் வருகிறார்கள் மற்றும் எவ்வித குற்றங்கள் தொடர்பான மனுக்கள் அதிகம் பதிவாகிறது என்பதை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எளிதில் அறிநத்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

✓வரும் காலங்களில் காவல் நிலையங்களுக்கு வராமலேயே புகார் மனுதார்கள் தாங்கள் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம் சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த புதிய திட்டம் பொதுமக்கள் மனுதாரர்களுக்கு மத்தியில் பெரிதும் வரவேற்பும் பாராட்டையும் பெற்றுள்ளது.