சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (29.09.2023) தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் கிழ‌க்கு தெருவில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது சுமார் 18 முதல் 20 மில்லி கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 175 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சாதிக் அலி மகன் ஜாகிர் உசேன் (36) என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேற்படி போதை பொருளை கடத்தி வந்து மேற்படி பாக்கு செட்டில் வேலை செய்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நூர்கல் இஸ்லாம் மனைவி அஸ்மா (40) என்பவர் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் மேற்படி ஜாகிர் உசேன் (36) மற்றும் அஸ்மா (40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 25 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள், பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 474 நபர்கள் மீது 353 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 661.676 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.