விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்தில் வடமாநில நபர் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டனர் அதிலிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த எஸ்.ஐ.அழகேசன் இளைஞர்கள் சிலர் உதவியுடன் அந்த நபரை பாதுகாத்து கீழராஜகுலராமன் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாசன் எஸ்.ஐ வெற்றிமுருகன் தலைமை காவலர் சரவணன் ஆகியோர் போலிஸ் படையுடன் அங்கு வந்து வடமாநில நபரை மீட்டனர் தகவலறிந்த மாவட்ட எஸ்.பி பரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இது குறித்து விசாரணை செய்ததில் அந்த நபர் பீகாரை சேர்ந்த பிரித்விராஜ் மகன் ராம் விலாஸ்ராம்(45) எனவும் அந்த பகுதியில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள சோலார் கம்பனியில் வேலை செய்வதாகவும் பொருட்கள் வாங்க ஊருக்குள் வந்து பாதை தெரியாமல் வழி தவறி இந்த பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளார்.

அதன்பின் அவர் வேலை செய்யும் கம்பெனி மேலாளர் மற்றும் அவருடன் வேலை செய்பவர்கள் வந்து இவர் ஒரு அப்பாவி வழி தெரியாமல் வந்திருப்பார் என்று விபரங்களை கூறியதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்.பி பேசுகையில் கிராமத்தினர் சந்தேகம் இருந்தால் அவர்களை தாக்குவது சட்டப்படி தவறு எதுவானாலும் காவல்துறை கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் வடமாநில தொழிலாளர்களை  வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் அவர்களின் விபரங்களை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில்  பதிவு செய்யவேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்களை நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால்  வாரம் ஒரு முறை நிர்வாகத்தினர் அவர்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் தனியாக எங்கும் செல்லவேண்டாம் என்றும் இதுகுறித்து காவல் துறையினர் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது, தாக்குதல் நடத்துபவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.