இந்தியாவின் கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக் கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நுண்ணறிவுப்பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக SAGAR KAVACH (TN&PY) 01/2024 என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 19.06.2024 மற்றும் 20.06.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பயிற்சியில் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை, இந்திய கப்பற்படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, நுண்ணறிவுப்பிரிவினர், சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, குடியுரிமைத் துறை, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம், துறைமுகங்கள், உள்ளிட்ட மத்திய மாநில அரசுசார் நிறுவனங்களோடு தமிழ் நாடு கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் மாநில காவல் துறையினர் என சுமார் 8700-த்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த பாதுகாவலர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பிரிவினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் போல கடல் வழியாக தமிழக நிலப்பகுதியில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகமாக புழங்கும் சந்தைப்பகுதி, வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்தல், பொதுமக்களை அச்சுறுத்துகிற நடவடிக்கைகளில் இறங்குதல், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் கப்பல்களைக் கடத்துதல், பிணைய கைதிகளைப் பிடித்துவைத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் திட்டமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்புப் படைகளை சேர்ந்த மற்றொரு பிரிவினர் அவர்களை ஊடுருவாமல் தடுக்கும் பணியில் தேவையான கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள் கரையோரம் ஓடும் வாகனங்கள் என 1000க்கும் அதிகமான

ஊர்திகளோடு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் சார்பில் 28 படகுகள் திருவள்ளுர் முதல் கன்னியகுமரி வரையிலான கடலோர பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது போல செயல்பட நியமிக்கப்பட்ட காவலர்கள் 21 இடங்களில் இடைமறிக்கப்பட்டு 91 நபர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

பயிற்சியின் ஒரு பகுதியாக தீவிரவாத ஒத்திகை பயிற்சி சென்னை துறைமுகத்தில் காலை 11:30 முதல் 12:50 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் சாகர்டாரா என்ற கப்பலை கைப்பற்றி அதில் உள்ள 14 மாலுமிகள் மற்றும் ஊழியர்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து அவர்களை விடுவிக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் கேட்டு நிபந்தனை வைப்பது போலவும், அரசு இதை மறுத்து, அதிரடி நடவடிக்கை எடுப்பது போலவும் அந்த உத்தரவின் பேரில் கூடுதல் காவல் துறை இயக்குநர் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாநில கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அவர்களது மேற்பார்வையில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள், இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை, சென்னை பெருநகர காவலர்கள் ஆகியோர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு பிணைய கைதிகளையும், கப்பலையும் மீட்பது போலவும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்பயிற்சியில் முதன்முறையாக தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை கப்பலில் இறக்கிவிட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கூடுதல் காவல் துறை இயக்குநர் கடலோரப் பாதுகாப்பு குழுமம் அவர்களின் தலைமையில் இப்பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.