குற்ற வழக்குகளில் சிறப்பான புலனாய்வு செய்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தந்த சென்னை காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., நேரில் பாராட்டு தெரிவித்தார்.
2018 அக்டோபர் 14-ம் தேதி எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சுதா ஓட்டல் முன்பு நடந்த கொலை சம்பவத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபர், இருவர் தாக்கி பணம் பறித்துத் தள்ளியதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தொடர்ந்து, சுதா ஓட்டல் பாதுகாவலர் விஷ்ணு பகதூரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கு F-2 எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, ஆதாயக் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் விசாரணை தீவிரமாக நடைபெற்று, கமல் (எ) மதுரை முத்து கைது செய்யப்பட்டார். வழக்கை முன்னெடுத்த அதே காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளர் A.கருணாகரன் தலைமையிலான குழுவினர் வழக்கை நுணுக்கமாக விசாரித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர்.
வழக்கின் நீதிமன்ற விசாரணை முடிவில், 2025 ஜூன் 16 அன்று, கமல் (எ) மதுரை முத்துவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சிறப்பான பணியை மதிப்பீடு செய்து, தற்போது F-3 நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளராக உள்ள A.கருணாகரனை, காவல் ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


மேலும், கீழ்பாக்கம் காவல் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் செந்தில் வடிவு மற்றும் G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் மணிகண்டன் ஆகியோர், முன்கூட்டியே தகவல் பெற்று மேற்பார்வை அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்ததற்காக அவர்கள் இருவரையும் காவல் ஆணையாளர் பாராட்டினார்.