ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இன்று (25.02.2026) T1 அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயப்பாக்கம் ரோடு, ப்ளூ பேக்ட்ரி அருகே வாகன சோதனை நடைபெற்றது.

ரகசிய தகவலின் பேரில், T1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் திரு. கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் TN 11 AQ 4685 பதிவெண் கொண்ட TOYOTA GLANZA காரை மடக்கி சோதனை செய்தனர். விசாரணையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற அந்த வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்து Cool Lip – 60.650 கிலோ, Vimal – 28.300 கிலோ என மொத்தம் 88.95 கிலோ குட்கா பொருட்களும், ரூ.2.10 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.

பொன்ராஜிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், போலீசார் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள கார்த்திக் ஸ்டோரின் பின்புற குடோனில் சோதனை நடத்தினர். அங்கு Hans – 197.750 கிலோ, Vimal Jartha – 6.900 கிலோ, Remo – 11.200 கிலோ என மொத்தம் 215.85 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், குட்கா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட TN 10 AD 6615 பதிவெண் கொண்ட SANTRO XING கருப்பு நிற நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் அயனம்பாக்கம், சென்னை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார். மொத்தமாக சுமார் 305 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு எதிரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.