திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, IPS தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் பதிவான வழக்குகளின் புலன் விசாரணை நிலவரம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காவல்துறை வாகனங்கள் ஆய்வு

ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், அவசர காலங்களில் காவலர்கள் பணிக்குச் செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்த அவர், வாகனங்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஓட்டுநர்களிடம் கேட்டறிந்து, பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குவது மற்றும் முறையாக பராமரிப்பது தொடர்பாக முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய 53 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்

தொடர்ந்து, மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாராட்டப்பட்டனர்.

அதேபோல், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 53 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.