சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று (21.07.2026) மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், இ.கா.ப. கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்ததுடன், “I am Against Drugs” என்ற வாசகத்துடன் கூடிய புதிய இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தி, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 6,000 கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையால் பல்வேறு பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய காவல் ஆணையாளர் முனைவர் A. அமல்ராஜ், போதைப்பொருள் பயன்பாடு உடல்நலத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் கடுமையாக பாதிப்பதோடு உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என எச்சரித்தார். போதையில்லா சமூகத்தை உருவாக்க மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், ஆன்லைன் முதலீடு, வர்த்தகம் மற்றும் இணைய மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சாலை விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, “Choose Life, No Drugs” என்ற தலைப்பில் மாணவர்கள் மௌன நாடகம் அரங்கேற்றினர். போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பாடல்கள், சாலை பாதுகாப்பு குறித்த பாடல்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான குறும்படங்களும் திரையிடப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, “I am Against Drugs” என்ற வாசகத்துடன் கூடிய செல்ஃபி புகைப்பட கூடத்தை (Selfie Photo Booth) காவல் ஆணையாளர் திறந்து வைத்து, போதைப்பொருள் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அவரது தலைமையில் மாணவ, மாணவிகள் அனைவரும் “Say No to Drugs” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) திரு. கபில் குமார் சி. சராட்கர், இ.கா.ப., வடக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திரு. எம். மனோகர், இ.கா.ப., புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு. சமய்சிங், இ.கா.ப., டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி கே. சிவகுமாரி, ஐஐடி மெட்ராஸ் சமூக முன்முயற்சிகள் மற்றும் வெளித்தொடர்பு தலைவர் திரு. என். ஹரிகிருஷ்ணன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சுமார் 6,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத சென்னை நகரை உருவாக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட உறுதியளித்தனர்.