சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் (26.06.2026) பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து 5 கிலோமீட்டர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
“Start Run – Stop Drugs” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த மராத்தான் ஓட்டத்தை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. துரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர், அவர்களும் மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) திரு. சரவணன், ஐ.பி.எஸ்., காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கலந்து கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தினார்.
மராத்தான் தொடங்குவதற்கு முன்பு, அனைவரும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, மாணவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் 5 கிலோமீட்டர் தூரம் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று, போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நிகழ்ச்சியின் நிறைவில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.