திருநெல்வேலி: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் “மாறு” என்ற விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26.06.2026) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஸ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., வரவேற்புரை ஆற்றி தொடக்கமளித்தார். தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி, இளைஞர்களின் மொழி, சிந்தனை மற்றும் இசை ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள “மாறு” என்ற விழிப்புணர்வு பாடல், போதைப்பொருளுக்கு எதிரான சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க காவல்துறை மட்டுமல்லாது பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது என வலியுறுத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளில் திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., “மாறு” என்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பாடலை வெளியிட, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆனந்த் மோகன், இ.ஆ.ப., குறுந்தகடை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இளைஞர்களை முழுமையாக சென்றடைய வேண்டுமெனில், அவர்கள் விரும்பும் இசை மற்றும் மொழி வடிவங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும், குறிப்பாக ராப் (Rap) பாணியில் உருவாக்கப்படும் சமூக விழிப்புணர்வு பாடல்கள் இன்றைய தலைமுறையினரிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் “மாறு” பாடல் வெளியீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி எனவும் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் “மாறு” பாடலின் உருவாக்கப் பின்னணி மற்றும் அதன் சமூக நோக்கம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இப்பாடலின் எழுத்து மற்றும் இயக்கத்தை மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரசிகவ் ஞானியார் மேற்கொண்டிருந்தார். பாடலின் குரல் மற்றும் இசை முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருந்தது.

பாடலின் நிறைவில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், இ.கா.ப., திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., ஆகியோர் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகத்தை பதிவு செய்திருந்தனர்.

பாடல் உருவாக்கத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளையும், நிகழ்ச்சி தொகுப்பையும் திருநெல்வேலி சரக காவல்துறையின் சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் முருகன் மேற்கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவில் திருநெல்வேலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சண்முகம் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.